ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சீரான ஏற்றத்துடன் கடந்து வருகிறது. கடந்த சில நாட்களில் தொடர்ந்து உயர்ந்த விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் குழப்பத்துடன் உள்ளனர். 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.9,470-க்கும், ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஆகஸ்ட் 7ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,400, ஒரு சவரன் ரூ.75,200 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை கூட அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.7,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.480 உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சில வாரங்கள் விலை சற்று சரிந்திருந்தாலும், தற்போது தொடர்ந்து 4 நாட்களாக விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-ஐ நெருங்கி வருகின்றது என்பது மிகவும் கவலைக்கிடமான தகவலாக உள்ளது. இந்த விலை நிலவரம் திருமண ஏற்பாடுகள், நகை முதலீட்டாளர்கள், சிற்று வணிகர்களிடம் சுமையாக மாறியுள்ளது.
இந்நிலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.127 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய விலை நிலவரம், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்க விரும்புவோரிடம் மேலும் காத்திருப்பது நல்லது என நிபுணர்கள் கருதுகின்றனர்.