பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களூருவில் இருந்து மைசூர் வரை பாதயாத்திரை நடத்த பாஜக, ம.ஜ.த.வினர் திட்டமிட்டுள்ளனர்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான ‘முடா’ சார்பில் 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, சமீபத்தில் மைசூரு மற்றும் பெங்களூருவில் பாஜக, ம.ஜ.த., ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தின.
அடுத்தகட்டமாக பெங்களூருவில் இருந்து முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூருவுக்கு பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், பா.ஜ., – ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முக்கிய கூட்டம் நடந்தது. அதன்பின் கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:
ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூரில் இருந்து பாதயாத்திரை தொடங்குவோம். மைசூர் சென்றடைய ஏழு நாட்கள் ஆகும். இந்த பாதயாத்திரையில் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆகஸ்ட் 10ம் தேதி மைசூரில் பிரமாண்ட நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது.அன்று இரு கட்சிகளின் தேசிய தலைவர்கள் தேவகவுடா, நட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.