நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ள நிலையில், இது தமிழகமா அல்லது கொலை நாடா என்று தே திமுக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பாஜக பிரமுகர் செல்வகுமார், அதிமுக நிர்வாகி பத்மநாபன், காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தே திமுக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஊழியரை வெட்டிக் கொன்றது. இதையடுத்து சிவகங்கை அருகே நேற்று இரவு பாஜக பிரமுகர் செல்வகுமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடலூர் அருகே அதிமுக பிரமுகர் பத்மநாதன் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைப் பார்க்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கொலை செய்வது சகஜமாகிவிட்டது.
இதுபோன்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், ரவுடிகள் தங்கள் மொழியில் பேசினால்தான் புரியும் என்றும் காவல்துறை அதிகாரி கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் நிறுத்தப்படவில்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரியவில்லை. இன்னும் படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது சட்டம்-ஒழுங்கு மிகப் பெரிய குழப்பமாக மாறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இதற்கு மிக முக்கியமான காரணம் டாஸ்மாக் கஞ்சாவை அதிக அளவில் உட்கொள்வதுதான். இதனை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்து போதையில்லா தமிழகத்தை உருவாக்கி தமிழகம் கொலைகார மாநிலமாக மாறாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.