சென்னை: மொரீஷியஸின் போக்குவரத்துத் துறைக்கு பரிசாக வழங்கும் நோக்கத்தில், இந்தியாவின் ‘ஸ்விட்ச் மொபிலிட்டி’ நிறுவனம் தயாரித்த மின் பஸ்களின் முதல் தொகுப்பு அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில், மொரீஷியஸுக்கு 100 மின் பஸ்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த பஸ்கள் அனைத்தும் ‘இ.ஐ.வி. 12’ மாடலுக்கு உட்பட்டவை. தற்போது 10 பஸ்கள் கொண்ட முதல் தொகுப்பை ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம் அனுப்பியுள்ளது.

மொரீஷியஸில், அந்த நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்த பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பஸ்கள் அனைத்தும், சென்னைச் சேர்ந்த ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டன.
இந்துஜா குழுமத்தில் உள்ள அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, மின்சார வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்த பஸ்களில் 45 பேர் வரை பயணிக்க முடியும். 180 முதல் 400 கிலோவாட்-அவர் பேட்டரி திறனை கொண்ட இந்த மாடலானது, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை பயணிக்கக்கூடிய தன்மையுடையது.