தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக தேர்தல் ஆணையத்தை தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றி விட்டதாக கடுமையாக கண்டித்துள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதையும், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதையும் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை அவர் ஆதரித்துள்ளார்.
கர்நாடகா மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான உறுதிமொழி பத்திரம் தேர்தல் ஆணையம் அவரிடம் கேட்டிருந்தது. தற்போது, காங்கிரஸ் கட்சி இணையவழி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை ஆதரித்து, ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், இது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பை திருடும் திட்டமிட்ட சதி எனக் கூறியுள்ளார். பெங்களூரின் மகாதேவபுராவில் நடந்தது தீவிர ஜனநாயக மோசடி என அவர் வலியுறுத்தினார்.
ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி நாடாளுமன்றம் முதல் தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழுமையான கணினி வடிவ வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்படும் வாக்காளர் பட்டியல் துஷ்பிரயோகங்களை நிறுத்த வேண்டும் எனவும், சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய பாஜக, இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப்பகலில் கொள்ளையடிக்கிறது, அதை அமைதியாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.