திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை தினமான இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த 26-ஆம் தேதி நடிகர் தனுஷ் நடித்து வெளியான அவரது 50-ஆவது படமான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்காகவும், ஆடி கிருத்திகை தினத்தை ஒட்டியும், நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்றார். நிறைவாக நடிகர் தனுஷுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷ், விறுவிறுவென 50 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
அவரது 50 ஆவது படமாக ராயன் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்த தனுஷ் தற்போது இயக்குனராகவும் வியக்கும் வகையில் செயல்பட்டு பாராட்டை பெற்றுள்ளார்.
அதிகமான வன்முறை காட்சிகளை கொண்டதாக வெளியான ராயன் படத்திற்கு தணிக்கை வாரியம் A சர்ட்டிஃபிகேட்டை கொடுத்தது. இருப்பினும் ராயன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் தனுஷ் தரிசனம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
குபேரா படத்தை முடித்துக் கொண்டு தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் அருண் மாதேஸ்வரன்.