சென்னை: தமிழ், மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பார்வதி திருவோத்து. பூ படத்தின் முலம் தமிழ் சினிமாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்திலும் தொடர்ந்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி உள்ள தங்கலான் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய பார்வதி, தனக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், டீ கடை வைத்து இருப்பேன் என்று கூறியுள்ளார்.
மலையாள திரைப்படத்தில் பிஸியாக நடித்து வந்த பார்வதி திருவோத்து, பூ படத்தில் மாரி என்ற ரோலில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன பாடல் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இருந்தாலும் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தங்கலான்: தற்போது இவர், பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி உள்ள தாங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில், விக்ரம், மாளவிகா மோகனன்,பசுபதி டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி கரன் , வேட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான ஹைப் ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை: படம் வெளியாக சில நாட்களே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் வேலை சூடுபிடித்துள்ளது. பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட பார்வதி திருவோத்து, சில இயக்குநர்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையில் மட்டுமே அவர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். அந்த மாதிரிதான் நான் தங்கலான் படத்திற்குள் நுழைந்தேன். திரைத்துறையில் வரும் பெரும்பான்மையான படங்கள் ஆண்களை மையப்படுத்திய கதையாகவே உருவாகி வருகிறது என்றார்.டீ கடை வைத்து இருப்பேன்: தொடர்ந்து, படம் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்த பார்வதி திருவொத்துவிடம், தொகுப்பாளினி, பூ படத்தில் நடித்தபின் உங்களுக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகள் வராமல் இருந்திருந்தால் உங்கள் பிளான் பி என்னவாக இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த பார்வதி,. நான் எதைப் பற்றியும் கவலையேபடவில்லை. எல்லா வேலையும் கண்ணியமானவைதான். இப்போது தான் இருக்கும் சினிமா துறையும் கண்ணியம் இல்லை என்றால், நான் இதில் இருந்து வெளியேறிவிடுவேன்.
எனக்கு சினிமா வொர்க் அவுட் ஆகவில்லை என்றால், ஒரு டீ கடை வைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய பிளான் பி ஆக இருந்தது என்று கூறியுள்ளார். இயக்குநர் அவதாரம்: பூ, மரியான், பெங்களூர் டேய்ஸ், தங்கலான் என குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ள பார்வதி திருவோத்து, விரைவில் இயக்குநராகவும் களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருடைய இயக்கத்தில் நடிகர் மம்முட்டி ஹீரோவாக இணைய இருப்பதாகவும், அந்தப்படத்தில் நடிகர் பிரித்விராஜும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.