சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை ஒட்டி தேநீர் விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றனர். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விருந்தை புறக்கணித்தார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் அழைப்பை நிராகரித்தன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் மட்டும் பங்கேற்றன. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வந்தனர்.
அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றார். பாமக சார்பில் எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் மற்றும் பார்த்தசாரதி வந்தனர். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.
இந்த முறை திமுக கூட்டணி கட்சிகள் முழுமையாக புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது. கடந்த ஆண்டும் திமுக கட்சி மட்டுமே புறக்கணித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். ஆனால் இம்முறை அவரும் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் புறக்கணிப்பில் இணைந்தது. ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த புறக்கணிப்பு கடுமையான அரசியல் செய்தியை தருவதாகக் கருதப்படுகிறது. நிகழ்வில் பங்கேற்ற கட்சிகள் மட்டுமே அரசியல் நட்பு சூழலை வெளிப்படுத்தின. இந்த சூழ்நிலை தமிழக அரசியல் தளத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.