சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, தெற்கு ரயில்வே ரயில் டிக்கெட் முன்பதிவை நாளை (ஆகஸ்ட் 18) முதல் தொடங்குகிறது. அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதனால் முன்பதிவுக்கான தேதிகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 17ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் கிடைக்கும். அதேபோல அக்டோபர் 18ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மேலும் அக்டோபர் 19ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் கிடைக்கிறது. அதே நேரத்தில் அக்டோபர் 20ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் புக்கிங் செய்ய முடியும்.
பண்டிகை காலத்தில் அதிகப்படியான பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவது வழக்கம். எனவே முன்பதிவு செய்யும் பயணிகள் ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புக்கிங் தொடங்கும் நாளிலேயே டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் நிரம்பி விடும் என்பதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பால் ஏற்கனவே உற்சாகம் அடைந்துள்ள பயணிகள், தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.