சென்னை: மத்திய அரசு, நாட்டின் மறைமுக வரி அமைப்பை எளிமையாக்கும் வகையில் புதிய ஜிஎஸ்டி விகிதங்களை அறிவித்துள்ளது. தற்போதுள்ள 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்கி, 5% மற்றும் 18% என்ற இரண்டு மட்டுமே வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் 5% வரிக்குள் வரும்.

அதே நேரத்தில், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், தீங்கு விளைவிக்கும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றிற்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படும். தற்போது 28% வரியில் உள்ள புகையிலைப் பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டால் விலை சுமார் 12% வரை அதிகரிக்கும். 15 ரூபாய் மதிப்புள்ள சிகரெட், 18 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு, வரி விகித சீரமைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை அதிக நுகர்வு மூலம் ஈடு செய்ய முடியும் என நம்புகிறது. புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தில் மக்கள் செலவினம் அதிகரித்து, சந்தை வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலிய பொருட்கள் இந்த புதிய அமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. மொத்த வருவாய் தாக்கம் தற்போதைய 88% அளவிலேயே நீடிக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாற்றங்கள் தீபாவளிக்கு முன்னதாகவே அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம். “இந்த தீபாவளியை இரட்டை தீபாவளியாக மாற்றுவேன்” என பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, மக்கள் தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் விலை குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
மக்கள் பயன்பாட்டுப் பொருட்களுக்கு சலுகை கிடைத்தாலும், புகையிலை மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு, சுகாதார மற்றும் சமூக நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படுகிறது.