புதுடில்லி புறப்பட இருந்த கொச்சி–டில்லி ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த விமானம், ஓடுபாதையில் ஆய்வு செய்யப்பட்டபோது கோளாறு கண்டறியப்பட்டது. நிபுணர்கள் அதை சரிசெய்ய முயன்றும் முடியாததால், விமானம் ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் அனைவரும் இறக்கி, கொச்சியில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானி கடைசி நேரத்தில் கோளாறை கண்டறிந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மை எனவும் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்த எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன், சமூக வலைதளத்தில் விமானத்தின் படத்தையும், அது அசாதாரணமாக சறுக்கியது போன்ற அனுபவம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். இச்சம்பவம் பயணிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.