ஜன்தன் வங்கி கணக்குகளில் கே.ஒய்.சி விவரங்கள் சேர்க்கப்படாவிட்டால் செப்டம்பர் 30க்குப் பிறகு அந்த கணக்குகள் செயல்படாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதனால் பலரும் வங்கிகளில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க ஆரம்பித்தனர். ஆனால் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய ‘ஜன்தன்’ திட்டம், ஏழைகள் மற்றும் வங்கி கணக்கு இல்லாதவர்களை நிதி அமைப்புக்குள் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 56 கோடியே 16 லட்சம் கணக்குகள் திறக்கப்பட்டு, ரூ.2.67 லட்சம் கோடி பணம் இருப்பு வங்கிகளில் உள்ளது. குறைவான கட்டண இருப்பு இன்றி கணக்குகளை பராமரிக்கும் வசதி என்பதே இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
சமீபத்தில் கே.ஒய்.சி. விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் கணக்குகள் செயலிழக்கும் என்கிற வதந்தி பரவியது. கே.ஒய்.சி என்பது வங்கிகள் வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரியை உறுதிப்படுத்தும் வழிமுறையாகும். இதனால், பலரும் வங்கிகளுக்கு விரைந்து சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க தொடங்கினர்.
இந்நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த தகவலில் உண்மை இல்லை. கே.ஒய்.சி விவரங்களைச் சேர்ப்பது கட்டாயமானதே. ஆனால் அவை புதுப்பிக்கப்படாவிட்டாலும் ஜன்தன் கணக்குகள் இயங்கிக் கொண்டே இருக்கும்” என தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குழப்பம் நீங்கியுள்ளது.