நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதில், திமுக அரசை அகற்றுவோம், அ.தி.மு.க – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமித்ஷா தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தாலும் மக்களின் ஆதரவை பெற முடியாது. வெறுப்பையே பெறுவார். திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியில் ரபேல், தேர்தல் பத்திர மோசடி, நெடுஞ்சாலை ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதானி – அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு சலுகைகள் வழங்கி சொத்து குவிக்கச் செய்தது மிகப்பெரிய ஊழல். உலக பணக்காரர்களின் பட்டியலில் அதானி உயர்ந்தது மோடியின் காரணம்” எனக் கூறினார்.
மேலும், “தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மட்டுமே இந்த கூட்டணி உருவாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிராகரிப்பது உறுதி” என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “இந்தி திணிப்பு, நீட் திணிப்பு போன்ற முடிவுகளால் தமிழ்நாடு மக்கள் பாஜகவை விரும்ப மாட்டார்கள். சமஸ்கிருத மொழிக்கே அதிக நிதி ஒதுக்கி, தமிழுக்கு அவமதிப்பு செய்யும் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். ஆயிரம் முறை வந்தாலும் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது” என கடும் தாக்குதல் நடத்தினார்.