லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சாதனையால் இந்தியாவின் பெருமையாகத் திகழ்கிறார். அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் அவர் 14 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் பின்னர் பூமிக்குத் திரும்பி, பிரதமர் மோடியை சந்தித்து டில்லியில் நடைபெற்ற விண்வெளி தின விழாவிலும் பங்கேற்றார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 25 அன்று பிறந்த மண்ணான லக்னோவுக்கு அவர் முதல்முறையாக வந்தடைந்தார். அவரை துணை முதல்வர் பிரஜேஷ் பதக், அவரது பெற்றோர், உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். லக்னோவின் மக்கள் அனைவரும் தங்கள் மகனை மீண்டும் வரவேற்பதில் பெருமையடைந்தனர்.
சுபான்ஷூவின் தாய் ஆஷா சுக்லா மகிழ்ச்சியுடன், “மகன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார். இவ்வளவு நாட்கள் கழித்து அவனை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்றார். அவருடைய சகோதரி, “இது எங்கள் குடும்பத்திற்கும், முழு லக்னோவிற்கும் பெருமை தரும் நாள். குழந்தைகள் அனைவருக்கும் அவர் ஒரு ஊக்கமாக இருப்பார்” எனக் கூறினார்.
உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், “சுபான்ஷூ சுக்லாவின் சாதனை இந்தியாவுக்கும் லக்னோவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. அவர் உலகுக்கு ஒரு புதிய பாதையை காட்டியுள்ளார். இளைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகம். அவரது சாதனையை கொண்டாட அரசின் சார்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.