அங்காரா: இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான ரத்தமோசும் போர் தொடரும் நிலையில், துருக்கி அதிபர் ரசெப் தயிப் எர்டோகானின் மனைவி எமினே எர்டோகான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதம், காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகும்.
63,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள இந்த நீண்டகால யுத்தம் 22 மாதங்களாக தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் பல நாடுகள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போதிலும், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டில் எந்த விதமான மாற்றமும் ஏற்படுத்தவில்லை. காசா நகரம் முழுவதுமாக அழிக்கப்படும் என எச்சரிக்கும் நிலையில், வன்முறை தொடர்ந்து பெருகி வருகிறது.
இந்த சூழலில், துருக்கி முதலாம் பெணரான எமினே, மெலனியாவிடம் எழுதிய கடிதத்தில், உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து நீங்கள் எடுத்துள்ள அணுகுமுறை பாராட்டுக்குரியது. அதே போன்று, இஸ்ரேலின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் வேண்டுகிறேன் என எழுதியுள்ளார். குறிப்பாக, காசா பகுதியில் இறக்கும் குழந்தைகள் குறித்து உலகம் பேச வேண்டும் என்றும், அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மெலனியாவே நேரடியாக இஸ்ரேல் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டியதையும், அமெரிக்காவில் இருந்து வரும் சக்திவாய்ந்த ஒலி இந்தப் போரை நிறுத்த உதவும் எனும் நம்பிக்கையும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அலாஸ்காவில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது, மெலனியா டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுக்கு உக்ரைன் போரைக் குறித்தே ஒரு தனிப்பட்ட கடிதம் அளித்திருந்தார். அந்த நடவடிக்கையால் உலக நாடுகளில் பெரும் கவனம் திரும்பியது.