வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் டிஜிட்டல் சேவை வரி விதித்து வருகின்றன. 2 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கும் இந்த நடைமுறை, அமெரிக்க நிறுவனங்களுக்கு பாரபட்சமாக இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆன்லைன் விளம்பரம், தரவு விற்பனை, இடைத்தரக சேவைகள் போன்ற வழிகளில் வருவாய் ஈட்டும் இந்த நிறுவனங்கள், அமெரிக்காவில் இருந்து இயங்குகின்றன என்பதைக் காரணமாக காட்டி, பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வரி செலுத்தாமல் வந்தன. இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் டிஜிட்டல் வரி விதிக்கப்படத் தொடங்கியது.
இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், “டிஜிட்டல் வரி, டிஜிட்டல் சேவைகள் சட்டம், டிஜிட்டல் சந்தை ஒழுங்குமுறைகள் அனைத்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டவை. அதே நேரத்தில், சீனாவின் பெரிய டெக் நிறுவனங்களுக்கு பல நாடுகள் முழுமையான விலக்கு அளிக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாத பாகுபாடு. இப்போதே முடிவு கட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த வரிகளை நீக்காவிட்டால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்கம் விதிக்கப்படும். எங்கள் நிறுவனங்களிடம் உலகம் உண்டியல் போல் பணம் எடுக்க முடியாது” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்திய அரசு 2016 முதல் அமெரிக்க டெக் நிறுவனங்களின் வருவாய்க்கு 6 சதவீத டிஜிட்டல் வரி விதித்து வந்தது. ஆனால் அமெரிக்காவுடன் வர்த்தக உறவை சுமுகமாக வைத்துக்கொள்ளும் வகையில், அந்த வரி இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் நீக்கப்பட்டது.