சென்னையில் கார் மற்றும் டூவீலர் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மந்தமடைந்துள்ளது. வழக்கமாக பண்டிகை கால தொடக்கத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அதற்குப் புறம்பாக விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி அறிவித்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் தான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் காத்திருப்பு நிலையைத் தேர்ந்தெடுத்ததால் விற்பனை குறைந்துள்ளது.

அரசின் “Vahan” இணையதள புள்ளிவிவரப்படி ஆகஸ்ட் 26 வரை சுமார் 18 லட்சம் வாகனங்களே விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஒரு ஆண்டில் குறைந்த அளவிலான விற்பனையாகும். ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்காக பொதுமக்கள் புதிய வாகன வாங்குதலை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.
தற்போது 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரிகள் உள்ளன. இதில் 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, குறைந்த விகிதங்களில் இணைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது கார், டூவீலர் விலையில் 60,000 முதல் 1.3 லட்சம் வரை குறைவு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், இஎம்ஐ கட்டணங்களும் குறையும் வாய்ப்பு உள்ளது.
மின்சார வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி, ஹைட்ரஜன் வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் Internal Combustion Engine வாகனங்களுக்கு அதிகபட்சம் 28% ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் 22% இழப்பீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. புதிய சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டால், கார் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, பண்டிகை கால விற்பனையில் மீண்டும் அதிகரிப்பு காணப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.