சென்னை: நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகே திருமணம் செய்வேன் என அறிவித்திருந்தார். அந்த கட்டிடம் இன்னும் முழுமையாக தயாராகாததால், இன்று காலை சாய் தன்ஷிகாவுடன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்த இந்த விழா, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய விஷால், “இன்று என்னுடைய கடைசி பேட்லர் பிறந்தநாள். இன்று காலை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒன்பது ஆண்டுகளாக நடிகர் சங்க கட்டிடத்திற்காக காத்திருந்தோம், இன்னும் இரண்டு மாதங்களில் அது நிறைவடையும். தன்ஷிகா என் வேண்டுகோளை ஏற்று பொறுமையாக காத்திருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
விஷால் மேலும், “எனக்கு கடவுள் ஒரு தேவதையை வாழ்க்கை துணைவியாக அளித்துள்ளார். எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். அவர்களின் ஆசீர்வாதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்டவுடன் என் திருமணமும் அந்த மண்டபத்திலேயே நடக்கும்” என உறுதியாக கூறியுள்ளார்.
திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், சங்க கட்டிடத்தின் மண்டபம் புக்கிங் செய்யப்பட்டுவிட்டதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள இந்த திருமணம், ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.