சென்னை: துல்கர் சல்மான் தயாரிப்பில், டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோயினாக நடித்துள்ள லோகா சாப்டர் ஒன்: சந்திரா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. மலையாள சினிமாவுக்கே புதிய பரிமாணம் சேர்த்துள்ள இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சியிலேயே படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்து, இன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

முன்பு சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மாநாடு படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் தனித்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார் கல்யாணி பிரியதர்ஷன். இப்போது லோகா மூலம் சூப்பர் ஹீரோயினாக களமிறங்கிய அவர், ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. கேமியோக்கள் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் படத்தின் பலமாக கருதப்படுகிறது.
மலையாள படமாக இது நம்ப முடியாத அளவுக்கு உயர்தரமாக உருவாகியிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிஜி காட்சிகள், ஆக்ஷன் சீன்கள், ப்ரொடக்ஷன் வேல்யூ அனைத்தும் ஹாலிவுட் தரத்தை ஒத்ததாக இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. “இந்த அளவுக்கு தரமான படத்தை மலையாள சினிமா கொடுத்திருப்பது பெருமை” என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் Wayfarer Films இன் பங்களிப்பு பெரிதாக பேசப்படுகிறது.
கல்யாணி பிரியதர்ஷன் தனது தேர்ந்தெடுக்கும் கதைகளின் மூலம் தொடர்ந்து முன்னேறி வருகிறார். லோகா வெளியான சில மணி நேரங்களிலேயே மலையாளம், தமிழ், தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். “ஒருமுறை பார்த்த பிறகு மறுபடியும் பார்ப்பது தவிர்க்க முடியாத அனுபவம்” என்று ரசிகர்கள் சொல்கின்றனர். இதன் மூலம், இந்த ஆண்டு மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக லோகா பதிவு செய்யப்பட்டுள்ளது.