வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட புதிய வரி நடவடிக்கையை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சல்லிவன் இதை “ஒரு வர்த்தக தாக்குதல்” என சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “இந்த முடிவு இந்தியாவை பீஜிங்கிற்கு நெருக்கமாக தள்ளக்கூடிய அபாயத்தை உருவாக்குகிறது. இந்தியா – அமெரிக்கா உறவை சீர்குலைக்கும் வகையில் உலகம் முழுவதும் நண்பர் நாடுகளும் கூட இந்த நடவடிக்கையை தவறான ஒன்றாகவே பார்க்கின்றன” என தெரிவித்தார்.
மேலும் அவர், “நாங்கள் இந்தியாவுடன் ஆழமான மற்றும் நிலையான உறவை உருவாக்கும் முயற்சியில் இருந்தோம். ஆனால், இந்த வரி உயர்வு இந்தியாவை சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவை ஆராயும் நிலைக்கு கொண்டு செல்கிறது. இது அமெரிக்காவின் நீண்டகால வெளிநாட்டு கொள்கைக்கும் பாதகமாக அமையும்” என எச்சரித்தார்.
இந்த நிலைமை, அமெரிக்கா – இந்தியா வர்த்தக உறவை மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளையும் சோதனைக்குள்ளாக்கக்கூடும் என சர்வதேச வட்டாரங்கள் கருதுகின்றன. இந்தியா தற்போது பல தளங்களில் உலக பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நிலையில், டிரம்ப் எடுத்துள்ள இந்நடவடிக்கை எதிர்காலத்தில் பெரிய பிளவுகளை உருவாக்கக்கூடும் என்ற கவலை வலுப்பெற்றுள்ளது.