இன்றைய டிஜிட்டல் உலகில் இயர்போன்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. இசையைக் கேட்பதிலும், ஆன்லைன் வகுப்புகளிலும், வேலை தொடர்பான கூட்டங்களிலும் அவை அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால், நம் உடல்நலத்துக்கு பெரிய ஆபத்து ஏற்படக்கூடும். குறிப்பாக காதின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு தொற்றுகள் உருவாகும் அபாயம் அதிகமாகிறது.

அழுக்கு இயர்போன்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர ஏற்ற சூழலை உருவாக்குகின்றன. காதின் ஈரப்பதமான மற்றும் சூடான சூழல், நுண்ணுயிரிகள் பெருகுவதற்கு சிறந்த இடமாகும். இதன் விளைவாக வெளிப்புற ஓடிடிஸ், தோல் தொற்று, மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் கேட்கும் திறனை பாதிக்கும் பிரச்சினைகள் உருவாகும். நிபுணர்கள் கூறுவதப்படி, நீண்ட நேரம் சுத்தம் செய்யாத இயர்போன்களைப் பயன்படுத்தினால், அரிப்பு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
சமீபத்திய ஆய்வுகள், இயர்போன்களில் தேங்கும் மெழுகு, வியர்வை மற்றும் தூசி பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், மற்றவர்களின் இயர்போன்களைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது. ஸ்டேஃபிலோகோகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்கள் இதன் மூலம் பரவுவதால், காது தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சினைகள் உருவாகின்றன.
இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க, இயர்போன்களை முறையாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஆல்கஹால் நனைத்த துணியால் அவற்றை சுத்தம் செய்யலாம். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்தவுடன், அவற்றை துடைத்து உலர்ந்த இடத்தில் வைப்பது நல்லது. மேலும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இயர்போன்களைப் பயன்படுத்தாமல் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நமது காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, இந்த எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம்.