ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு, ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்தார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டோக்கியோவில் நேற்று 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
ஜப்பான் பயணத்தை முடித்த பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி செண்டாயிலிருந்து சீனாவின் தியான்ஜினுக்கு விமானம் மூலம் சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குச் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் தியான்ஜினில் இன்றும் நாளையும் SCO உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி சீன அதிபரிடம் கூறினார். “கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள் நடந்தன, இதன் மூலம் எங்கள் உறவுகள் நேர்மறையான திசையில் நகர்கின்றன.
எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லை மேலாண்மை விஷயத்தில் எங்கள் சிறப்பு பிரதிநிதிகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.
நமது நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன், 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுதான் மனிதகுலத்திற்குத் தேவை,” என்று பிரதமர் மோடி கூறினார்.