புதுடில்லி: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால் வாகனங்களின் மைலேஜ் குறையும் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவியிருந்தன. ஆனால் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதை முற்றிலும் தவறான தகவல் எனத் தெரிவித்துள்ளது. எத்தனால் கலப்பது வாகன மைலேஜில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என தொழில்துறை அமைப்புகள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பது சுற்றுச்சூழல் ரீதியாக பெரும் நன்மை தருகிறது. புதிய வாகனங்களோ, பழைய வாகனங்களோ எந்த சிக்கலும் ஏற்பட்டால் கார் உற்பத்தியாளர்கள் வாரண்டி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை எத்தனால் கலப்பால் வாகனங்கள் சேதமடைந்ததாக எந்த புகாரும் வராததோடு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும் இது முற்றிலும் பாதுகாப்பானது என்று உறுதி செய்துள்ளது.
டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட், ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளும் இணைந்து நடத்திய சோதனைகளில் எத்தனால் கலப்பு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எத்தனால் கலப்பால் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைகிறது என்றும், இது மாசுப்பிரச்சினையை தடுக்கும் முக்கியமான முயற்சி என்றும் வலியுறுத்தப்படுகிறது.
கரும்பு, சோளம், சேதமடைந்த தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது புதுப்பித்தக்க உயிரி எரிபொருளாக இருப்பதால், காற்று மாசைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. சர்வதேச தரத்திற்கேற்ப, இந்தியா இந்த எத்தனால் கலப்பு இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே அடைந்துள்ளது என்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.