பீஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சீன அதிபரின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியா எப்போதும் இந்த அமைப்பில் சாதகமான பங்கை வகித்து வருவதாகக் குறிப்பிட்டார். “நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பும் அமைதியும் அவசியம். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே ஒரு பெரிய சவாலாக உள்ளது” என அவர் வலியுறுத்தினார்.

மோடி மேலும், இந்தியாவை பொறுத்தவரை SCO என்பதன் பொருள் S-பாதுகாப்பு, C-இணைப்பு, O-வாய்ப்பு எனக் கூறினார். அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ஒற்றுமை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், “இந்தியா நான்கு தசாப்தங்களாக பயங்கரவாத தாக்குதல்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்திய பஹல்காம் தாக்குதல் போன்று பல சம்பவங்களில், நட்பு நாடுகள் இந்தியாவுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால் பாதுகாப்பும், அமைதியும், நிலைத்தன்மையும் மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் மட்டும் ஒரு நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்து நிற்காமல், மனிதகுலத்தின் நலனுக்கே அச்சுறுத்தலாக உள்ளது என பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒற்றுமையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று தனது உரையை நிறைவு செய்தார்.