பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் தாயை அவதூறாக பேசிய காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சியினருக்கு எதிராக, என்டிஏ கூட்டணியின் மகளிர் அமைப்பினர் செப்டம்பர் 4ஆம் தேதி மாநிலம் முழுவதும் தர்ணா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநில பா.ஜ., தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் தெரிவித்ததாவது: தர்பங்காவில் நடந்த பேரணியில் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணி சார்பில் பிரதமரின் தாயாரை இழிவாகப் பேசியுள்ளனர். இதனை கண்டித்து என்டிஏ தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7 மணி முதல் நண்பகல் வரை மகளிர் அமைப்பினர் தர்ணா நடத்த உள்ளனர்.

பிரதமரின் தாயை குறித்த கருத்து அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் உரையால் மகளிர் அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு சமூகக் குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசியல் விமர்சகர்கள், குடும்பத்தை குறிவைத்து பேசுவது ஜனநாயக நெறிமுறைக்கு முரணானது எனக் கூறியுள்ளனர்.
பீகார் அரசியல் சூடுபிடித்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி சார்பில் இதுவரை எந்தவொரு மன்னிப்பும் வெளிவரவில்லை. இதனால் தர்ணா போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. செப்டம்பர் 4ஆம் தேதியன்று பீகார் முழுவதும் நடைபெறவுள்ள இந்த போராட்டம் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்க்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
பிரதமரின் தாயை அவதூறு செய்த விவகாரம், பீகாரின் அரசியல் சூழ்நிலையை மட்டுமின்றி நாடு முழுவதும் பேசப்படும் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. இந்த போராட்டம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வருகிற நாட்களில் வெளிப்படும்.