பீஜிங் நகரில் நடைபெற்ற 80வது வெற்றி தின ராணுவ அணிவகுப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல உலகத் தலைவர்களும் பங்கேற்றனர். பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, உயிர் நீடிப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய சாத்தியம் போன்ற விஷயங்களை இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.

இந்த உரையாடல் ஹாட் மைக்கில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புடினின் மொழிபெயர்ப்பாளர், உயிர்தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து குறிப்பிட, அதற்குப் பதிலளித்த ஜி ஜின்பிங் மனிதர்களின் ஆயுட்காலம் இந்த நூற்றாண்டில் அதிகரிக்கலாம் எனக் கூறினார். இதைக் கேட்டு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சிரித்துக்கொண்டிருந்தார். ராணுவ அணிவகுப்பை ஆன்லைனில் 1.9 பில்லியன் மக்கள் பார்த்ததாகவும், தொலைக்காட்சியில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பயோடெக்னாலஜி முன்னேற்றம் மூலம் பழுதான உறுப்புகளை மாற்றிக் கொள்ளும் திறன், மனித உடலை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கக்கூடியதாக இருக்கும் என புடின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஜி ஜின்பிங் உடன்பாடுகொடுத்து, எதிர்காலத்தில் மருத்துவத் தொழில்நுட்பம் மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை வலியுறுத்தினார். சாகாவரமும் பெறலாம் என புடின் கூறியதனால் இந்த உரையாடல் மேலும் சுவாரஸ்யம் பெற்றுள்ளது.
இந்த விவாதம் குறித்து பின்னர் புடின் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார். நவீன மருத்துவ முன்னேற்றங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், மற்றும் புதிய சிகிச்சை முறைகள் மனிதர்களின் வாழ்க்கையை மேலும் சுறுசுறுப்பாக்கும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார். இத்தகைய உரையாடல்கள் உலக அரசியல் மட்டுமல்ல, மனித குலத்தின் எதிர்கால வாழ்வு குறித்து தலைவர்கள் காட்டும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகின்றன.