சென்னையில் இன்று (செப்டம்பர் 5) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் தங்க விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்றைய உயர்வு நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாத இறுதியிலிருந்து தங்க விலை மெதுவாக உயர்ந்துகொண்டே வந்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,805க்கும், ஒரு சவரன் ரூ.78,440க்கும் விற்பனையாகியது. ஆனால் நேற்று திடீரென விலை குறைந்து, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795 ஆனது. சவரன் விலை ரூ.80 குறைந்து, ரூ.78,360க்கு விற்பனையானது.
ஆனால் இன்று மறுபடியும் விலை உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.9,865 ஆகியுள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.78,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் இந்த ஏற்றத் தாழ்வுகள் நகை சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை ரூ.80,000க்கு நெருங்கியிருப்பதால், திருமணத்திற்கும், முதலீட்டிற்கும் நகை வாங்கும் மக்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது. நகை வியாபாரிகள், “சர்வதேச சந்தை மாற்றங்களே இந்நிலையில் முக்கிய காரணம்” என்று கூறுகின்றனர். அடுத்த சில நாட்களில் விலை மேலும் உயருமா அல்லது குறையுமா என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.