சென்னை: மதுரையில் கவிஞர் வைரமுத்துவின் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் கையொப்பத் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நூல்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து, திருக்குறளை இனத்தின் அடையாளமாக நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அவர், “ஆயிரம் பேர் வரிசையில் நின்று நூல் பெற்றனர்; அனைத்து நூல்களிலும் கையொப்பமிட்டேன். பெரியோர் முதல் இளையோர் வரை என் சமகாலச் சமுதாயம் வள்ளுவர் மறை வைரமுத்து உரையை வரவேற்று மகிழ்கிறது” என்று குறிப்பிட்டார். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி, இஸ்ரோ விஞ்ஞானி வேலாயுதம் பிள்ளைக்கு தனிப்பட்ட முறையில் நூல் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

திருக்குறளின் மகத்துவத்தை விளக்கிய அவர், “பைபிளின் பழைய ஏற்பாடு யூதர்களின் சட்டமாக ஆனது, கன்பூசியஸின் அறக்கருத்துக்கள் சீனாவின் சட்டங்களாயின, மனுதர்மத்தின் கூறுகள் இந்தியச் சட்டங்களாயின, குர்ஆனின் திருவாசகங்கள் இஸ்லாமியச் சட்டங்களாயின. ஆனால் திருக்குறளை எந்த அரசும் அரசனும் சட்டமாக்கவில்லை” என்றார்.
இனிவரும் தலைமுறையாவது திருக்குறளுக்கு உரிய பெருமை அளித்து, அதனை இனத்தின் அடையாளமாக நிலைநிறுத்த வேண்டும் என வைரமுத்து வலியுறுத்தினார்.