ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலை மஹாராஷ்டிரா போலீசார் சிக்கவைத்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையில், ஐடி நிபுணர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.12,000 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் (MD) என்ற போதைப்பொருளும், தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட 35,000 லிட்டர் ரசாயனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேரமல்லி பகுதியில், ரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் பல ஆண்டுகளாக ரகசியமாக போதைப்பொருள் உற்பத்தி செய்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநில போலீசின் மீரா-பயந்தர், வசாய்-விரார் மற்றும் குற்றப்பிரிவு பிரிவுகள் இணைந்து, சுமார் ஒரு மாத காலம் ரகசிய கண்காணிப்பு நடத்தின. அதன் பேரில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு, கும்பலுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் ஒருவரான ஐடி நிபுணர், தனது தொழில்நுட்ப மற்றும் ரசாயன அறிவை தவறாக பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த மாதம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட வங்கதேசப் பெண் பாத்திமா முராத் ஷேக் இந்த கும்பலுடன் நேரடியாக தொடர்புடையவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், முகவர்கள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகள் மூலமாக மும்பைக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து விற்பனை செய்யப்பட்டது. இதற்கு வெளிநாட்டு தொடர்புகளும் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், வழக்கு சர்வதேச அளவிலும் விசாரிக்கப்படுகிறது.
இந்த சோதனையின் மூலம் மாநிலங்களுக்கிடையேயான போதைப்பொருள் வியாபார வலையமைப்பு வெளிச்சம் போடப்பட்டுள்ளது. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.12,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.