கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 1,200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலை, போர் சூழ்நிலை மற்றும் அமெரிக்காவின் அதிக வரிகள் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக தங்கம் தொடர்ந்து வரலாற்று சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்று செப்டம்பர் 6ஆம் தேதி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10,005க்கும், சவரனுக்கு ரூ.80,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.8,285க்கும், சவரனுக்கு ரூ.66,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.138 என உயர்வைக் கண்டுள்ளது. நகை விற்பனையாளர் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார், தங்கம் விலை இன்னும் உச்சத்தை அடையவில்லை என்றும், அடுத்த ஆறு மாதங்களில் சவரன் ஒரு லட்சம் ரூபாய், கிராம் ரூ.12,500 என உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ஒரே ஆண்டில் தங்கம் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியும், டாலர் மதிப்பு உயர்வும் இந்திய சந்தையை பாதித்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை வேகமாக உயர்கிறது. தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து உயரும்” என்றார்.
தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாகவே கருதப்படுகிறது. நீண்டகால சேமிப்பிற்காக தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் இப்போது வாங்கிக் கொள்வது சிறந்த நேரம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நிச்சயமான லாபத்தை தரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.