அடிஸ் அபாபா: நைல் நதியின் நீல நைல் கிளையில் எத்தியோப்பியா கட்டியுள்ள “மகா மறுமலர்ச்சி அணை” (Grand Ethiopian Renaissance Dam – GERD) செப்டம்பர் 9ஆம் தேதி பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.
1920ல் பிரிட்டிஷ் காலனித்துவ ஒப்பந்தத்தின் அடிப்படையில், நைல் நதியின் நீரின் பெரும்பகுதியை எகிப்து பயன்படுத்தி வந்தது. இதை மாற்றும் வகையில், எத்தியோப்பியா 2009ஆம் ஆண்டு அணை கட்டத் திட்டமிட்டது. எகிப்து கடும் எதிர்ப்பு தெரிவித்தும், நிதி திரட்டுவதைத் தடுக்க முயன்றும், எத்தியோப்பியா மக்களிடமிருந்து நிதி சேகரித்து 2011ல் பணியைத் தொடங்கியது.

இந்த அணை 14 ஆண்டுகளாக கட்டப்பட்டு, ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் நிறைவு பெற்றுள்ளது. 1875 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், 74 பில்லியன் கன மீட்டர் (2620 டிஎம்சி) தண்ணீர் சேமிக்கக்கூடிய திறன் கொண்டது. உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக கருதப்படும் இது, 5.15 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடியது.
அணை மூலம் பாசனம், குடிநீர், மின்சாரம் ஆகிய துறைகளில் எத்தியோப்பியா மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். எகிப்து தண்ணீர் பங்கில் பாதிப்பு ஏற்படும் எனக் கவலை தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த திட்டம் எத்தியோப்பியாவின் சுயநிறைவு மற்றும் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி சின்னமாகக் கருதப்படுகிறது.