சென்னையில் நடிகர் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நிறுவன துவக்க விழாவில் மூன்று படங்களின் அறிவிப்பும் வெளியானது. அதில் முதன்மையானது யோகி பாபுவை நாயகனாகக் கொண்டு அவர் இயக்கவிருக்கும் An Ordinary Man எனும் படம். விழாவில் மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், கார்த்தி, டாக்டர் சிவராஜ்குமார், ஜெனிலியா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ரவி மோகன் இயக்குநராக மாறுவதை பற்றி யோகி பாபு நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். “கோமாளி படத்தில் பணியாற்றும்போது, ‘நான் படம் இயக்கினால் நீங்க தான் ஹீரோ’ என்று ரவி கூறினார். அதை ஆறு வருடம் கழித்தும் நிறைவேற்றியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி,” என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
ப்ரோமோவில், யோகி பாபு பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். பொன்னியின் செல்வன் ராஜா, டிக் டிக் டிக் விண்வெளி வீரர், பூலோகம் குத்துச்சண்டை வீரர் போன்ற வேடங்களில் நடித்தும், இறுதியில் லுங்கியுடன் பாயை சுமந்து வரும் யோகி பாபுவை பார்த்து “இந்த ordinary man கெட்டப்புதான் உங்களுடைய கதாபாத்திரம்” என ரவி மோகன் நகைச்சுவையாக அறிவிப்பது ரசிகர்களுக்கு சிரிப்பைத் தந்துள்ளது.
படத்தில் ஜெய் சாரோலா ஒளிப்பதிவு செய்கிறார், ஹைட்ரோ இசையமைக்கிறார், பிரதீப் இ ராகவ் எடிட்டிங் செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன. ரவி மோகனின் இந்த இயக்குநர் அவதாரம் மற்றும் யோகி பாபுவின் பல கெட்டப்புகள் ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.