சென்னை: விரைவு பஸ்களை வாடகைக்கு பயன்படுத்தலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தொலைதூர ஊர்களுக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிரூட்டப்பட்ட இருக்கை மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள், குளிரூட்டப்படாத இருக்கை மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுப நிகழ்ச்சிகளில் குழுவாக பங்கேற்பதற்கும், ஆறுபடைவீடு கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற கோயில்களுக்கு தரிசனம் செய்வதற்கும் குறைந்த கட்டணத்தில் இந்த பேருந்துகளை ஒப்பந்த வண்டி அடிப்படையில் பெறலாம்.
இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு www.tnstc.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும், 94450 14402, 94450 14424, 94450 14463 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.