மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் யூனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) சேவையில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நாளில் ரூ.2 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதி இருந்த நிலையில், இனி அந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) இதை அறிவித்து, வரும் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

இணைய வங்கி, மொபைல் வங்கி ஆகியவற்றை விட யுபிஐ மக்கள் வாழ்க்கையில் வேரூன்றி விட்டது. சிறிய அளவு பரிவர்த்தனை முதல் பெரிய அளவிலும் யுபிஐ அதிகமாக பயன்படுத்தப்பட்டதால், பரிவர்த்தனை வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. அதனை கருத்தில் கொண்டு, வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு மற்றும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் முன்வைத்த கோரிக்கையை NPCI ஏற்று இந்த புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
ஆனால், தனிநபர் ஒருவர் மற்றொருவரின் கணக்கிற்கு நேரடியாக அனுப்பும் பரிவர்த்தனை வரம்பில் மாற்றம் இல்லை. முந்தைய விதிமுறைகள் போன்று ஒருவருக்கு ஒருவர் அனுப்பும் பரிவர்த்தனை ரூ.1 லட்சமாகவே நீடிக்கும். அதேபோல் கல்விக் கட்டணம், மருத்துவச் செலவுகள், முதலீடு போன்றவற்றுக்கான ரூ.5 லட்ச வரம்பும் தொடரும்.
இந்த உயர்வு பெரும்பாலும் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக கடன் திருப்பிச் செலுத்துதல், பங்குச் சந்தை முதலீடு, காப்பீடு, நகைக்கடைகள் போன்ற துறைகளில் தினசரி அதிக அளவிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், யுபிஐ வரம்பு உயர்வு வணிக துறைக்கு பெரிய நன்மை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுமக்களுக்கு உடனடி பெரிய தாக்கம் இல்லாவிட்டாலும், மொத்தத்தில் யுபிஐ பயன்பாட்டை விரிவாக்கும் முக்கியமான முடிவாக இது கருதப்படுகிறது.