பீஜிங் அரசு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சமீபத்திய அழுத்தக் கொள்கைக்கு கடும் பதில் அளித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், சீனாவுக்கு 50 முதல் 100 சதவீதம் வரிகள் விதிக்க வேண்டும் என டிரம்ப் நேட்டோ நாடுகளிடம் வலியுறுத்தினார். இதற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, “போருக்கான தீர்வை வரி விதிப்பதாலோ பொருளாதாரத் தடைகள் விதிப்பதாலோ காண முடியாது. அவை நிலைமையை மேலும் சிக்கலாக்கும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.

வாங் யி மேலும், “போருக்கு மாற்றாக அமைதி பேச்சுவார்த்தைகளே ஒரே வழி. சீனா எந்தப் போர்களிலும் பங்கேற்கவோ, தூண்டவோ விருப்பமில்லை. தற்போதைய சூழலில் சீனாவும் ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இல்லாமல் நண்பர்களாக இருக்க வேண்டும்” என்றார்.
ரஷ்யா-உக்ரைன் மோதலில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்துக்கு எதிராக, சீனா தொடர்ந்து நடுநிலைப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. ஆனால் அமெரிக்காவின் வரி மற்றும் தடைகள் குறித்த எச்சரிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் புதிய விரிசலை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
சீனாவின் இந்த பதில், உலக பொருளாதாரத்தில் நிலவும் பதட்டத்தை வெளிப்படுத்துவதோடு, அரசியல் மற்றும் வர்த்தக தளங்களில் அமெரிக்கா-சீனா உறவுகளை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமைந்துள்ளது.