தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 9 காரட் தங்க நகைகள் சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்திய தர நிர்ணய அமைப்பின் ஹால்மார்க் பிரிவில் 9 காரட் தங்கமும் சேர்க்கப்பட்டதால் இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஆனால், 9 காரட் நகைகளில் 37.5 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும்; மீதமுள்ள 62.5 சதவீதத்தில் செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற அலாய் உலோகங்கள் இருக்கும். இதனால் இவை வெளிப்படையில் தங்கம் போல தோன்றினாலும், மதிப்பில் குறைவாகவே இருக்கும். பேஷன் டிசைனர்கள் பல்வேறு ஆபரணங்களை இதிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

எனினும், இத்தகைய நகைகளுக்கு மறுவிற்பனை மதிப்பு உறுதியாக இருக்குமா என்பது சந்தேகமே. எனவே, தங்கத்தை சொத்தாகக் கருதி வாங்குபவர்கள் 22 காரட் தங்கத்தையே தேர்வு செய்வது சிறந்தது. மாற்றாக, தங்க இ.டி.எப்., அல்லது அரசு வழங்கும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பான வழி.
தங்கத்தை அலங்கார நோக்கத்திற்காகவே வாங்க விரும்புபவர்கள் 9 காரட் ஆபரணங்களை அணியலாம். ஆனால் முதலீட்டு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, 9 காரட் தங்கம் விலை உயர்வையும், எதிர்கால மதிப்பையும் வழங்காது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.