பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளையொட்டி, உலகத் தலைவர்கள் முதல் இந்திய அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத்தின் வட்நகரில் பிறந்த மோடி, சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். பின்னர் பாஜகவில் சேர்ந்து 1998ஆம் ஆண்டு பொதுச் செயலாளராக உயர்ந்தார். 2001ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தார். அதன் பின் 2014ஆம் ஆண்டு முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டு இன்று வரை தொடர்ந்து நாட்டை வழிநடத்தி வருகிறார்.

மோடி தலைமையிலான பாஜக, 1984க்குப் பிறகு முதல் முறையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அவர் இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகிக்கும் காங்கிரஸ் அல்லாத முதல் தலைவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இன்று அவரது பிறந்த நாளையொட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அணிந்த ஜெர்சியில் கையொப்பமிட்டு மோடிக்கு பரிசளித்துள்ளார்.
மேலும், டெல்லி கல்வி அமைச்சகம் 21 மொழிகளில் சிறப்பு பாடலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் இந்த நாளை முன்னிட்டு நடைபெற்று வருகின்றன.