மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் நடக்கும் மோசடிகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களைப் பாதுகாக்கிறார் என அவர் கடுமையாக குற்றம்சாட்டினார். தமிழகத்திலிருந்து ஆந்திரா வரை பல மாநிலங்களில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாகவும், இது எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களை குறிவைக்கும் அரசியல் சதி எனவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் குறிப்பாக குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆலந்த் பகுதியில் 6,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், மகாராஷ்டிராவின் ரஜுரா தொகுதியில் 6,850 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் ஆதாரங்களுடன் விளக்கினார். ‘கோதாபாய்’ என்ற பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பிக்கப்பட்டது, ஆனால் அந்தப் பெயர் வைத்த நபருக்கே அது தெரியாது என வெளிப்படையாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
வாக்காளர் பட்டியலில் இந்த மோசடிகள் அனைத்தும் பூத் கமிட்டிகளுக்கே தெரியாமல் நடந்துள்ளதாகவும், தேர்தலை திருட மையப்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். “நான் இதுவரை வெடிகுண்டை மட்டுமே வெளியிட்டேன், இனிமேல் ஹைட்ரஜன் வெடிகுண்டு வெளியிடப் போகிறேன்” என எச்சரித்து அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளேன் என்று அவர் வலியுறுத்தினார். “நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுவது மக்களின் பொறுப்பு. குறிப்பாக இளைஞர்கள் எழுந்து தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்க வேண்டும்” என ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.