வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கை தடுக்க சில ஆங்கில வார்த்தைகளுக்கு தனது நாட்டில் தடை விதித்துள்ளார். இதன்படி, Hamburger, Ice Cream, Karaoke போன்ற சொற்களை இனிமேல் மக்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகள் மேற்கத்திய வாழ்க்கைமுறை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சின்னங்களாக இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதற்கு பதிலாக, Hamburger-க்கு “கொத்துக்கறியுடன் கூடிய இரட்டை ரொட்டி” என்று பொருள்படும் dajin-gogi gyeoppang, Ice Cream-க்கு eseukimo, Karaoke-க்கு screen accompaniment machine என்ற மாற்றுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய மொழியின் தூய்மையைப் பேணவும், நாட்டின் தனித்துவமான தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் தென் கொரியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கலாச்சார செல்வாக்கு வடகொரியாவில் பரவுவதை தடுப்பதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளங்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களை ஏற்கும் எந்தச் செயலுக்கும் வடகொரியாவில் கடுமையான தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், புதிய உத்தரவுக்கு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.