ஜப்பான் அரசியலில் புதுமையான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் “Path to Rebirth” என்ற பிராந்திய கட்சியின் தலைவராக “பென்குயின்” என்ற பெயருடைய ஏஐ நியமனம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் பல துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அரசியல் துறையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

அக்கட்சி சமீபத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் மேல்சபை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது. அதற்கு முன்னர் நடைபெற்ற மாகாண தேர்தலிலும் வெற்றியிழந்தது. தொடர்ச்சியான தோல்வியால், கட்சி தலைவர் இஷிமரு பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, புதுமையான முயற்சியாக கட்சி தலைமையை ஏஐக்கு வழங்கியுள்ளனர்.
இந்த அறிவிப்பை, அந்த ஏஐ அமைப்பை ஆய்வு செய்து வரும் மாணவர் கோகி ஒகுமுரா வெளியிட்டார். மேலும், அந்த ஏஐக்கு தேவையான வழிகாட்டுதலையும் உதவியையும் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஏஐ எத்தனை நாள், எவ்வாறு தலைமை வகிக்கும் என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏஐ வேலை வாய்ப்புகளை பறிக்கிறது என்ற விமர்சனங்களும் உள்ளன. அதேசமயம், மக்கள் நலனுக்கான திட்டங்களில் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம், உலக அரசியலிலும் ஏஐயின் பங்களிப்பு அதிகரிக்கப்போகிறது என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.