கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா மழையால் சிக்கலில் சிக்கியது. அண்ணா, பெரியார் மற்றும் திமுக தொடக்க நாள் என மூன்று பெரும் நினைவு தினங்களை ஒட்டி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், மழையால் தொண்டர்கள் நனைந்து சிரமத்தை சந்தித்தனர். இதனால் கூட்டம் தாறுமாறாக கலைந்தது.

விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்த வேனில் வந்து உரையாற்றினார். கூட்டம் அலைமோதினாலும், மழை பெய்ததால் தொண்டர்கள் இருக்கைகளைத் தலையில் தூக்கி பாதுகாப்பு தேடினர். இதனால் ஸ்டாலின் தனது உரையை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பந்தல் போடப்படாததால் மழையில் தொண்டர்கள் நனைய நேர்ந்தது பெரிய குறையாக மாறியது.
செந்தில் பாலாஜி ட்ரோன் ஷாட் எடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதால் பந்தல் போடப்படவில்லை என தகவல். ஆனால், இதுவே தொண்டர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி, நிகழ்ச்சியை பாதித்ததாக சீனியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கே.என். நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தவறை சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
திமுக பொதுக்கூட்டங்களில் வழக்கமாக பக்கா ஏற்பாடுகள் இருக்கும் என்ற பெயருக்கு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இந்த முறை மழை காரணமாக நிகழ்ச்சியின் தரம் குறைந்ததாகவே கருதப்படுகிறது. “கோடு போட சொன்னா ரோடு போட்டிருக்கிறார்” என ஸ்டாலின் பாராட்டிய செந்தில் பாலாஜியின் இந்த முடிவு, கட்சிக்குள் விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.