பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாக்குத் திருட்டு தொடர்பாக பேசிய அவர், “அணுகுண்டைவிட பெரிய ஹைட்ரஜன் குண்டு விரைவில் பாஜகவுக்கு விழப்போகிறது. வாக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதை மக்கள் விரைவில் உணரப்போகிறார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவரது இந்த கூற்றை பாஜகவினர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரான ரவி சங்கர் பிரசாத், “இது நாட்டின் மக்களை அவமதிப்பதாக உள்ளது. ராகுல் காந்தி அரசியலமைப்பையும், சட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்தார். அதேபோல, பாஜக அமைச்சர்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும், “ஹைட்ரஜன் குண்டு என்ற அவரது உவமை முட்டாள்தனமானது” என்று கடுமையாக சாடினர்.
இதேவேளை, மகாராஷ்டிரா அமைச்சரும் சிவசேனா தலைவருமான யோகேஷ் கடம், ராகுல் காந்தி சமீபத்திய தோல்விகளை ஜீரணிக்க முடியாமல், வாக்குச் சோரி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என குற்றம் சாட்டினார். வரவிருக்கும் பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் என்றும் அவர் சாடினார்.
ஆனால், காங்கிரஸ் எம்.பி தாரிக் அன்வர், ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். “தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது உறுதி” என அவர் வலியுறுத்தினார்.