தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த வாரம் திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது திரண்ட பெரும் கூட்டம் காரணமாக அரியலூரில் மட்டும் உரையாற்றி பெரம்பலூர் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதனால், விஜய்யின் சுற்றுப்பயணங்களில் மக்கள் கூட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.

இதனை முன்னிட்டு, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு சில கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். முக்கியமாக, விஜயின் வாகனத்தை யாரும் இருசக்கர அல்லது பிற வாகனங்களில் பின்தொடரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் சந்திப்பு நடைபெறும் இடங்களில் உயரமான கட்டடங்கள், கம்பங்கள், சிலைகள் போன்றவற்றில் ஏறி நிற்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வராமல், பாதுகாப்புக்காக வீட்டிலிருந்தே நேரலை மூலம் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு தொண்டர்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பட்டாசு வெடித்தல், பிளக்ஸ், பேனர், அலங்கார வளைவுகள் போன்றவற்றை அனுமதியின்றி அமைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின் அமைதியாக கலைந்து செல்லவும், யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விஜயின் சுற்றுப்பயணம் சீராக நடைபெறவும் உதவும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.