பந்தலூர்: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரை மீட்க வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட துணிச்சலான 8 மணிநேர நடவடிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றது. இந்த வார தொடக்கத்தில் வயநாட்டில் ஏற்பட்ட மூன்று நிலச்சரிவுகளில் 350 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
வயநாடு வனப்பகுதியில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே முண்டகை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை உள்ளிட்ட பல கிராமங்கள் சிக்கின.
அட்டமலை வனப்பகுதியில் பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதில் ஏரட்டுக்குன்னுவை சேர்ந்த கிருஷ்ணன், சாந்தா ஆகிய இருவரும் குழந்தைகளை வீட்டில் வைத்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றனர். அன்று இரவு, நிலச்சரிவு ஏற்பட்டபோது, கிருஷ்ணன் மற்றும் சாந்தா இருவரும் தங்கள் வீட்டிற்குச் செல்ல முடியாமல் காட்டில் சிக்கிக் கொண்டனர்.
வனத்துறையினர் அவர்களை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்த நிலையில், அவர்களது குழந்தைகள் வனப்பகுதிக்குள் குடிசையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்பின் கல்பட வனச்சரகர் ஆசிப் தலைமையிலான குழுவினர், மலையில் செங்குத்தான பாதையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கயிறு கட்டி குழந்தைகளை மீட்டு முகாமுக்கு கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் கொடுத்து கட்டிப்பிடித்து வனத்துறையினர் மீட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.