ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அறிவிப்பால் பெரும் அதிருப்தியடைந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்கள் மீது கடும் விமர்சனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். “பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் பயங்கரவாத அரசை திணிக்க யாரும் முடியாது. அமெரிக்கா பயணத்திலிருந்து திரும்பியவுடன் இதற்கு பதிலடி கொடுக்கப்படும்” என அவர் எச்சரித்தார்.

நாடாளுமன்றங்களின் அங்கீகார அறிவிப்புகள், பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி போல தோன்றினாலும், அது பயங்கரவாதத்துக்கு வெகுமதியாகும் என நெதன்யாகு குற்றம்சாட்டினார். “ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் உருவாகாது. எங்கள் பாதுகாப்புக்காக இதைத் தடுப்பதே எங்கள் கடமை” என்றார்.
மேலும், பல ஆண்டுகளாக உலகளாவிய அழுத்தங்களுக்கு இடமின்றி, இஸ்ரேல் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கி, பாலஸ்தீன அரசை உருவாக்கும் முயற்சிகளை தடுத்துவந்ததாக நெதன்யாகு தெரிவித்தார். எதிர்காலத்திலும் அதே பாதையில் தாங்கள் தொடர்வோம் என்றும் வலியுறுத்தினார்.
இதனால், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் குரல் கொடுக்க, மறுபக்கம் இஸ்ரேல் தனது கடுமையான நிலைப்பாட்டை வலுப்படுத்துவதால், எதிர்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.