சென்னை: நேற்று முன்தினம் இரவு சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிற்குச் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
டிடிவி தினகரனுடன் அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன். தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து நாங்கள் இருவரும் பேசினோம். மீண்டும் கூட்டணியில் சேருமாறு அவரை வலியுறுத்தினேன். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. கோரிக்கையை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது தினகரனின் விருப்பம். டிடிவி தினகரனுடன் பாஜக தொடர்ந்து நட்புறவில் உள்ளது.

அரசியல் தேர்தல் களம் சூடுபிடிக்கும்போது சிறிய மனக்குறைகள் மாறும் என்று நம்புகிறேன். இன்னும் நேரம் இருக்கிறது; காத்திருப்போம்; அரசியலில் கூட்டணிகள் மாறும். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்ஸும் 2024-ல் பாஜக கூட்டணிக்கு வந்து எங்களை நம்பி வந்தவர்கள். அவர்களைப் புண்படுத்தும் வகையில் பொதுவில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விரைவில் சந்திப்பேன். நான் வழக்கமாக மாதத்திற்கு ஒரு முறை நடிகர் ரஜினிகாந்தைச் சந்திப்பேன். நடிகர் ரஜினிகாந்தை அடிக்கடி சந்திப்பேன்; சமீபத்தில் அவரைப் பார்த்தேன். நான் ரஜினிகாந்தை ஒரு குருவாகப் பார்க்கிறேன்; அவர் ஆன்மீகம் பற்றிப் பேசுவார்; ரஜினி ஒரு ஆத்ம துணையாக இருக்கக்கூடிய நபர். எனவே அதை அரசியலுடன் இணைக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.