நியூயார்க் நகரில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார். புடினின் தலைமையில் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதையும், உலகிற்கு ஆற்றல் மிகுந்த நாடாகத் தோன்றினாலும் உண்மையில் ரஷ்யா பலவீனமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, உக்ரைன்-ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதை சுட்டிக்காட்டி, உண்மையான இராணுவ சக்தி கொண்ட நாடாக இருந்தால் ரஷ்யா இதற்குள் வெற்றி பெற்றிருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் நிலையை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் டிரம்ப், போரைக் கைவிடும்படி ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வணிகத்தில் ஈடுபடும் நாடுகள் உடனடியாக பின்வாங்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இந்த போரை நீடிக்கச் செய்வதில் இந்தியா மற்றும் சீனாவும் பங்கு வகிக்கின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கும் ஆதரவுடன் உக்ரைன் தன்னுடைய இழந்த நிலப்பகுதிகளை மீட்கும் திறன் பெற்றுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். ரஷ்ய மக்களும், மாஸ்கோவில் வாழும் மக்களும் உண்மையை அறியும் தருணம் நெருங்கிவிட்டது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இது நடைபெறும் பட்சத்தில் உக்ரைன் தனது முழு நாட்டையும் மீட்டெடுக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
“இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்த போரின் மூலமாக உலகிற்கு வெளிப்பட்ட உண்மை என்னவென்றால், ரஷ்யா உண்மையில் ஒரு காகிதப்புலி என்பதே” என்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவு செய்துள்ளார். அவரது இந்த கூற்று உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.