கொல்கட்டா நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் இடைவிடாத கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், வெள்ளம் மற்றும் மின்சார தாக்குதல் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 1978ம் ஆண்டு பிறகு செப்டம்பரில் பதிவான மிக அதிக மழைப்பொழிவு இதுவாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 251.4 மில்லிமீட்டர் மழை கொட்டியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையைக் கடுமையாக சுட்டிக்காட்டிய பாஜ, முதல்வர் மம்தா பானர்ஜியின் அலட்சியமான போக்கே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில், மாநில அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், அரசின் திறமையற்ற நிர்வாகம் மீண்டும் வெளிப்பட்டுவிட்டது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி, இதற்கு பதிலளித்தபோது, இவ்வாறான பேரிடரை அரசியல் நோக்கில் பயன்படுத்துவது பாஜவின் பழக்கமாகிவிட்டது என்று கூறினார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி மற்றும் அவரது அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாகவும், இந்திய வானிலை மையம் முன்கூட்டியே ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கியிருந்தபோதும் அதை புறக்கணித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
“முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கப்பட்ட நிலையில் பேரிடர் மீட்பு படையினர் ஏன் தயாராக வைக்கப்படவில்லை? மக்கள் உயிரிழப்பிற்கு யார் பொறுப்பு?” என்று சுவேந்து அதிகாரி கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டுகள் மம்தா பானர்ஜி அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.