சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடிகர் ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களாவை வங்கி ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியுள்ளது. கடந்த பத்து மாதங்களாக மாதாந்திர தவணை செலுத்தப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.7.60 கோடிக்கு மேல் தொகையை செலுத்தாவிட்டால் அந்த பங்களா ஏலத்திற்கு விடப்படும் என வங்கி எச்சரித்துள்ளது.

சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கி தயாரிக்க அறிவித்திருந்த ரவி மோகன், இத்தகைய பிரச்சினையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக இவர் நடிக்கும் கராத்தே பாபு மற்றும் ஜீன் படங்களுக்கான எதிர்பார்ப்புகள் உயர்ந்த நிலையில், தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்கள் அவரை வாட்டி வருகின்றன.
பங்களா பிரச்சினை குறித்து வங்கியிலிருந்து வந்த நோட்டீஸை ரவி மோகன் நேரடியாக பெற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தாலும், இதுவரை தவணை பிரச்னை தீர்க்கப்படவில்லை. தற்போது அந்த பங்களாவில் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகள் வசித்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ரவி மோகன் தனது பெயரை ‘ஜெயம் ரவி’யில் இருந்து மாற்றிக்கொண்டதிலிருந்து, தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறார். இந்த பிரச்சினை எவ்வாறு முடிவடைகிறது என்பது ரசிகர்களிடையே பெரும் விவாதமாக உள்ளது.