பாரிஸ்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் உட்பட ஏழு போர்களை ஏழு மாதங்களில் நிறுத்தியுள்ளேன். எனவே அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத் தரப்பட வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நேரடியாக கிண்டல் செய்துள்ளார்.

அவர் கூறியதாவது: “டிரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசை விரும்பினால், காசாவில் போரை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து, காசா போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சக்தி அவரிடம் இருக்கிறது. அதைச் செய்தால்தான் அவர் நோபல் பரிசுக்குத் தகுதி பெற முடியும்” என்றார்.
மேலும், “அமைதியை விரும்புவதாக மட்டும் கூறுவது போதாது. செயலில் அதை நிரூபிக்க வேண்டும். உலக சமாதானத்தை நிலைநாட்டும் வழிகளில் தலைமை காட்டினால் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்” என்றும் மேக்ரோன் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபரின் “நோபல் ஆசை” குறித்த இந்த கருத்து, சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா போர் முடிவுக்குக் கொண்டுவரப்படுமா என்பதுதான் இப்போது உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.